கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி. இவரின் கணவர் மதியழகன்(45). மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் வந்தனர். அதனை பார்த்த மதியழகன் தன்னை கொலை செய்வதற்கு வருவதை அறிந்த அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார். அப்போது மதியழகனை 5 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்தனர்.
மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் அரிவாளை சொருகிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். கொலை செய்யப்பட்ட மதியழகன் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது மகனுக்கும் தகவல் தெரிந்து அவர்கள் அங்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்த மதியழகன் உடலை பார்த்து கதறி துடித்து அழுதனர்.
இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கொல்லப்பட்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் 2020இல் தாழங்குடாவில் மதிவாணன் என்பவர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகவும் மதியழகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மதியழகன் ஏற்கனவே மதிவாணன் கொலை வழக்கில் தொடர்பில் உள்ளவர் என்பதால் பழிவாங்கும் நோக்கத்துடன் அவர் கொல்லப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.