அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் வழக்கறிஞர் எம்.எல். ரவி, ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுபோல முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனனும் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா , நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட அமர்வில் இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என கவர்னர் ரவி கூறினாரே தவிர , அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என எங்கே கூறினார். அமைச்சரை நீக்க வேண்டும் என கவர்னர் கடிதம் எழுதி இருந்தால் அதை காட்டுங்கள். அரசியல் அமைப்பு சட்டப்படி தான் நாங்கள் செயல்பட முடியும். 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.
பிற்பகல் 2.30 மணி அளவில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையிலான கடிதப்போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது. இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை வரும் ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.