Skip to content
Home » லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். மூத்த மகன் ஜீவந்த் (25) கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தார். அடுத்தாக இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் புகழ் பெற்ற ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க ஜீவந்த் விண்ணப்பித்தார். அவருக்கு அங்கு இடமும் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி அவர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு படிக்க சென்றார். இரவு 11 மணியை கடந்தும் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பயந்து போன நண்பர்கள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அவர்களும் மாணவர் காணாமல் போனது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தினர். போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினர். இந்த நிலையில் 21-ந் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசாருக்கு பர்மிங்காம் கால்வாயில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டதாகவும், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் யார் என விசாரித்தனர். அப்போது அவர் காணாமல் போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவையில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்தனர். இதனை கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறிய ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் கிடந்தார் என்பது போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது. எப்படி அவர் அங்கு வந்தார், தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரும் அவருடன் வந்தனரா? என்றும் விசாரிக்கின்றனர். இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!