அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022–23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் மூலம் “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தில் உயர்க்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.
2022–23 ம் கல்வியாண்டில்; பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரியலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் வருவாய்த் துறையின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட
சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதரச் சான்றுகள் பெரும் வகையில் இன்றைய தினம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
சிறப்பு முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்ததாவது,.. தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிகாட்டியாக சிறப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகமானது அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்படவுள்ளது. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேரவும், நல்லதொரு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ளவும் இந்த சிறப்பு முகாமானது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நடத்தபட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், த.விஜயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவன முதல்வர் கே.எஸ்.மொழியரசி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்(பொ). ஜே.டோமினிக் அமல்ராஜ்,மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.