அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு ஜூன் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 14ம் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், காவலில் எடுத்து விசாரித்தால், உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இந்த நிலையில், காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், செந்தில்பாலாஜி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடியும் ஜூன் 28ந்தேதி காணொலி மூலம் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் மட்டுமே கஸ்டடி எடுத்து விசாரிக்க முடியும். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு முதல் 15 நாட்கள் வரும் 28ம் தேதி வரை முடிகிறது. பைபாஸ் சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ளதால் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க வாய்ப்பு இல்லை என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்..