அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீஸ் ரஜினி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர் . அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான ஒரு கார் நின்றது. உஷாரான போலீசார் எச்சரிக்கையுடன் காரை பார்த்தபோது காரில் 5 மர்ம நபர்கள் இருந்தனர் அவர்களிடம் விசாரணை செய்த போது அதில் ஒருவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அவரைத் தொடர்ந்து மற்றவர்களை விசாரிக்க முற்படும்போது 4 பேரும் அந்த பகுதியில் இருந்து ஏரிக்குள் புகுந்து தப்பி ஓடினர்.
துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் செல்வகுமார் கூடுதல் போலீசாரை வரவழைத்து ஏரியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டையில் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன், பெரம்பலூர் மாவட்டம் பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள்
கொண்டு வந்த காரை சோதனையிட்ட போது காரில் சைக்கிள் செயின், கம்பி பாறை மற்றும் ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆனந்தவாடி டாஸ்மாக் கடையை கொள்ளை அடிக்க திட்டம் இட்டு இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்ததோடு காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் விழிப்புடன் போலீஸ் உதவி ஆய்வாளர் செல்வகுமார் துரிதமாக செயலபட்டதனால் டாஸ்மாக்கில் நடக்க இருந்த பெரும் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.