மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தமிழக முதல்வர் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு இன்று காவிரி நீர் வந்து சேர்ந்தது., மாவட்டத்தின் கடைசி நீர் ஒழுங்கியான, நரியங்குடி ஓடம்போக்கி ஆற்றில் வந்து சேர்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் ஆரத்தி எடுத்தும் மலர் மற்றும் நெல்மணிகள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் மகிழ்ச்சியுடன் கும்மியடித்து, பாட்டுப்பாடி காவிரித்தாயை வணங்கினர். காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், நாகை
மாவட்டத்தில் இவ்வாண்டு 50, ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் எனவும், இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளதாக காவிரி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடைமடைக்கு காவிரி நீர் உரிய நேரத்தில் வந்துள்ளதால் இவ்வாண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், குறுவை சாகுபடி தொகுப்பை ஒரு ஏக்கர் என்பதை மாற்றி, விவசாயிக்கு ஒரு ஹெக்டர் அளவிற்கு வழங்க வேண்டும் என்றும் நாகை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.