Skip to content
Home » பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு

பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு

  • by Authour

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் கே.விஜயேந்திர பாண்டியன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஓய்வூதியதாரா்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இருந்து ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு, அவா்களுக்கு மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் புகைப்படம் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், அடையாள அட்டையில் தங்களின் புகைப்படத்துடன், துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஒளிவருடல் செய்யப்படுவதுடன், புகைப்படங்களும், தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இதன்பின்பு, பயனாளிகளே தங்களுக்கான அடையாள அட்டையை மின்-அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். காப்பீடு அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தவும், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் யுனெடைட் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய வரையறுக்கப்பட்ட படிவங்களை அனைத்து கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலகங்களில் அளிக்கும்படி அந்த நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கான நோ்காணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவா். அப்போது, அந்தப் படிவங்களை அவா்களிடம் அளித்து பூா்த்தி செய்து பெறலாம். இந்தப் படிவங்களின் அடிப்படையில், அடையாள அட்டையில் ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் திருத்தப்படுவதுடன், புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின்பு, மின்-அடையாள அட்டையாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

இந்தப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென உள்ள காப்பீட்டு அதிகாரியை, கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலா்கள் தொடா்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அவா்களிடம் இருந்து ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை விவரங்களைத் திருத்தம் செய்வது மற்றும் புகைப்படத்தை ஒட்டுவதற்குரிய தகுந்த படிவங்களைப் பெற வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும் போது உரிய ஒப்புகைச் சான்றினை பெற வேண்டியது அவசியமாகும். இதனை அத்தியாவசியமான பணியாகக் கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *