சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மீது வழக்குப்பதிய நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் வக்கீல் ராஜூ. இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 20ம் தேதி மாலை என் டுவிட்டர் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஜெய்சங்கர் ஜெய்நாத் என்பவருக்கு பதில் அளிப்பதற்காக நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் ‘‘செருப்பால் அடி, உங்கள் தொழிலை காப்பாற்றுவதற்காக, வீட்டு பெண்களை பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கலாம், வெட்கமற்ற மனிதர்கள்’’ என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பெண்களை சமூக வலைதளத்தில் இழிவாக விமர்சித்துள்ளார். இதனை பார்த்து என் வீட்டு பெண்கள் தாங்க முடியாத மனவேதனையும், அவமானமும் அடைந்துள்ளனர்.
எனவே நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்கு மண்டல சரவணகுமார், தலைமையிடம் அனிதா மற்றும் உதவி கமிஷனர்கள் சதீஷ்குமார், பாளை (பொறுப்பு) சரவணன் ஆகியோர் நடிகை குஷ்பு மீது எந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து மாநகர போலீஸ் துறையை சேர்ந்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகை குஷ்பு ட்விட்டரில் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.