அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமைச்சர் தரப்பில் திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார். சுமார் 2 மணி நேரம் இந்த வாதம் நடந்தது. பின்னர் வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
ஆட்கொணர்வு மனு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதைத்தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம். சட்டவிரோதமாகவோ, இயந்திரத்தனமாகவோ ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தால், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அமைச்சர் சிகிச்சை பெறும் நாட்களை காவல் காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும் என கூறினோம். கைது செய்யப்பட்ட ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுத்து வலிசாரிக்க வேண்டும். அதன் பிறகு அவரை காவலில் எடுக்க கூடாது என வாதிட்டோம்.
சுங்க சட்டம், ஜிஎஸ்டி சட்டம், வருமான வரிச்சட்டங்களின் படி அதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கான அதிகாரம் உள்ளது. பிஎம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் அமலாக்கத்துறை, நாங்கள் போலீஸ் இல்லை என்று கூறுகிறார்கள். சி.ஆர்.பி.சி. எங்களுக்கு பொருந்தாது என்று சில நேரங்களில் கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் எப்படி கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும்? காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி 14ம் தேதி அதிகாலை 1.58 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர். அவரிடம் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை விசாரித்து உள்ளனர். ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தது அதிகாலை 2 மணிக்கு. அப்படியானல் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியை எப்படி கையாண்டார்கள் என்பதை அமலாக்கத்துறை இருட்டடிப்பு செய்துள்ளது.
அந்த நேரத்தில் அவர் சட்டத்திற்கு புறம்பாக விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு உள்ளார். மோசமாக நடத்தப்பட்டுள்ளார். இதனால் தான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வரும் 27ம் தேதி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை வைக்கிறார். அதன் பிறகு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.