Skip to content
Home » கரூர் அருகே பிடிபட்ட 4 பைக் திருடர்கள்…. மரத்தில் கட்டிவைத்து ஊர்மக்கள் கவனிப்பு

கரூர் அருகே பிடிபட்ட 4 பைக் திருடர்கள்…. மரத்தில் கட்டிவைத்து ஊர்மக்கள் கவனிப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதமாக அடிக்கடி பைக்குகள் திருட்டு போனது. இந்த நிலையில் நேற்று இரவு மேலப்புடையானூரில் பைக் திருட வந்தவர்களை துரத்திய போது, ஒரு பைக்கை அங்கேயே போட்டு விட்டு, மற்றொரு பைக்கில் மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அதனைத் தொடர்ந்து மர்மநபர்கள் விட்டு சென்ற பைக்கை எடுப்பதற்காக  நான்கு பேர் அங்கு வந்தனர்.

இதை கண்காணித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைக்கை எடுக்க வந்த 4 பேரையும்  பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். பின்னர் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் பொதுமக்கள் பிடித்த வைத்திருந்த பைக் திருடர்களை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு செல்ல முற்பட்டனர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் ஏற்கனவே திருட்டு போன பைக்குகள் அனைத்தையும் திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்து தர வேண்டும் என்றும், மேலும் இப்பகுதியில் உள்ள கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாகவும், தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கொசூர் – போத்தராவுத்தன்பட்டி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், குளித்தலை டி.எஸ்.பி. ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர். மறியலால்  2 மணி நேரம் போக்குவரத்து பாதி்க்கப்பட்டது.

விசாரணையில் அந்த இளைஞர்கள் மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்த 18 வயதான லோகநாதன், மற்றும் 17 வயதான கவின் சபரிநாதன், சக்கரவர்த்தி ஆகிய இளைஞர்கள் என்பதும், அதில் ஒருவன் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் மீது திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகங்கள் இருந்துள்ளதாகவும்  இவர்கள் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

போத்துராவுத்தன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்று பைக் திருட்டுகள் மற்றும் உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இது குறித்து புகார் அளித்தும் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்யாமலும், இரவு நேர ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் கவன குறைவாக செயல்பட்டதால்,  திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *