அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 13ம் தேதி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் அவரை ஒரே அறையில் வைத்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர். இதனால் அமைச்சர் இதயவலியால் துடித்தார். உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமைச்சரை பரிசோதித்ததில் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதும், உடனடியாக அவருக்கு ஆபரேசன் செய்ய வேண்டும் எனவும் டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில் காவேரி ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை கோர்ட் ஏற்றுக்கொண்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதமும், அதற்கு நீதிபதிகள் கொடுத்த பதிலும் வருமாறு:
அமலாக்கத்துறை வழக்கறிஞர்: கைதான 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்; எனவே காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
நீதிபதிகள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ள போதுஅவரை காவலில் எடுக்க முடியுமா? உடல்நிலை சரியில்லை என மருத்துவக் குழு சான்றளித்த பின் அவரை காவலில் எடுக்க கோருகிறீர்களா? செந்தில் பாலாஜிக்கான சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தலாமே?
செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது. செந்தில் பாலாஜியை தீவிர பரிசோதனை செய்த பின்பே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
அமலாக்கத்துறை வழக்கறிஞர்: இந்த வழக்கு பிற குற்றம்சாட்டப்பட்டோருக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும் .
நீதிபதிகள்:செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம். தற்போதைய நிலையில் உயர்நீதிமன்றம் விசாரணை சரியாக இருக்கும் . உயர்நீதிமன்றம் முன் முறையிட அமலாக்கத்துறைக்கு முழு உரிமையும் உள்ளது. மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியும் .
அமலாக்கத்துறை வழக்கறிஞர்: செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையே கேள்வியாக உள்ளது . விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில்பாலாஜி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
நீதிபதிகள்: மீண்டும் மருத்துவக் குழு அமைத்து அவரை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது .உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது அதிருப்தி அளிக்கிறது.
செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 4க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கிறோம். செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை பார்த்தபின் விசாரிக்கிறோம். உச்சநீதிமன்ற வழக்கை காரணம்காட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக்கூடாது .
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது தொடர்பான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவையும், ஆட்கொணர்வு மனுவுக்கு தடை கோரிய மனுவையும் ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமலாக்கத்துறையின் தாறுமாறான நடவடிக்கைக்கு செக் வைக்கப்பட்டதாகவும், இது அமலாக்கத்துறைக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் மிக ஆபத்தான நிலையில் உள்ள ஒரு நோயாளியிடம் மனிதாபிமான அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதற்கும் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.