Skip to content

புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (47), இவரது கணவர் ராஜேந்திரன் (50) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கரூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த கவிதா குடும்ப சூழ்நிலை காரணமாகவும், திருமணம் நடந்து குழந்தைகள் பெற்றதால் உயர்கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தமிழக அரசின் “புதுமைப்பெண்” திட்டம் குறித்து தெரிந்து கொண்ட கவிதா 32 ஆண்டுகள் கழித்து, உயர்கல்வி மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அவரது தோழி ஒருவர் உதவியின் மூலம் கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஒரு வருட தையல் தொழில்நுட்ப பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.

புதுமைப்பெண் திட்டம் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், தனிப்பட்ட முறையில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாதம் 750 ரூபாய் உதவி தொகையும் என, மொத்தம் 1750 ரூபாய் உதவித்தொகை தற்போது கிடைக்கிறது. மேலும், இலவச சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ் ஆகிய சலுகைகளும் கிடைக்கின்றன.

உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய திட்டமே புதுமைப்பெண் திட்டமாகும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகள், கல்லூரிகளில் சேரும் போது அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக கல்லூரிகளில் சேரும் மாணவியரின் விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

வீட்டிலேயே சிறிய அளவில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வரும் கவிதா, குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த பயிற்சியில் சேர்ந்ததாக தெரிவிக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைப்பதை தற்போது வரை நம்ப முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக இவருடன் சேர்ந்து மேலும் சில பெண்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டம் வாயிலாக பல ஆண்டுகளுக்கு முன் இடை நின்ற தனது கல்வியை தையல் தொழில்நுட்ப பயிற்சி வாயிலாக மீண்டும் உயர்கல்வி பெறுவதில் மகிழ்ச்சி எனவும் தமிழக முதல்வருக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அரசின் நல்ல திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு பள்ளி சீருடை தைத்து வழங்கும் பணியை தனக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பயிற்றுநர் தேன்மொழி இது பற்றி கூறும் போது, அரசு மூலமாக கிடைக்கும் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மிதிவண்டி, ஊக்கத்தொகை, பஸ் பாஸ் என பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் பெண்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *