நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு இன்று கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குறிப்பேட்டில், பதிவு செய்த கவிப்பேரரசு வைரமுத்து, நமக்கு நாமே பயணத்தினை தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்தினை பெற்று தொடங்கிய யாவும் வெற்றி பயணமாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், இன்று 19/06/2023 தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த இல்லத்திற்கு வந்ததின் மூலம் எனது பயணம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப வந்துள்ளது என எழுதி கையெழுத்திட்டார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு? பதில் அளித்த கவிப்பேரரசு வைரமுத்து,
சினிமா நடிகன், மனிதன் மட்டுமல்ல! அவன் உரிமை உள்ள இந்திய குடியுரிமை பெற்ற வாக்காளன். அரசியலுக்கு சினிமா நடிகன் என்றோ, கல்வியாளன் என்றோ, வேறுபாடு கிடையவே கிடையாது என்றார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் அரசியல் அவர்களை தேர்ந்தெடுக்கிறதா என்பதுதான் மிக முக்கியம் என்றார்.
விஜய் அரசியலுக்கு வருவதை கணிப்பதற்கு காலம் உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவது என்பது பூ, பூத்து, பிஞ்சாகி, காயாகுமா? கனியாகுமா? என்பதை காலம் பொறுத்திருந்து கணித்து சொல்ல வேண்டும் என கவிப்பேரரசு வைரமுத்து தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும் நடிகராக இருப்பது மட்டுமே அரசியலுக்கு தகுதியானவராக முடியாது என சீமான் கூறிய கருத்து மிக சரியானது என்றும், நடிகனாக இருப்பதால் மட்டுமே அரசியலுக்கு வரும் முழு தகுதியும் அவர்களுக்கு வந்து விடாது!
நடிகர் என்ற அறிமுகத்தோடு அரசியலுக்கு வந்து விட்டால் மட்டும் போதாது, அரசியலில் வருபவருக்கு, சமூக அக்கறையும், ஆற்றலும், லட்சியமும் வேண்டும் என்று சீமான் கருதுவது தவறு இல்லை. அது ஒவ்வொரு தமிழனும் கருதும் கருத்து தானே. அதை பிழை என்று கருத முடியாது என வைரமுத்து தெரிவித்தார்
தமிழ்நாட்டு ஆளுநர் இன்னும் தமிழக அரசோடும், மக்களோடும் ஒத்துழைக்க வேண்டும். இன்னும் ஒரு படி சொல்லப்போனால் தமிழ் மக்களின் மனநிலையை ஆளுநர் ஆர் எம் ரவி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதைத்தான் தமிழ்நாடு எதிர்பார்ப்பதாக கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.