மக்கள் குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் போன்றவர்களிடம் தங்கள் குறைகளை கூறி பரிகாரம் தேடலாம். இதுபோல கர்நாடகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு நடந்த முகாமில் ஒரு வாலிபர் வித்தியாசமான கோரிக்கை மனு கொடுத்தார். அதைப்பற்றி பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முண்டரகி தாலுகாவில் உள்ள தம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ஹுகாரா (28). வியாபாரியான இவர் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்ய பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். சுமார் 2 ஆண்டுகளாக அவர் வரன் தேடியும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் நொந்துபோன முத்து ஹுகாரா தம்பல் கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில், நான் திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து வந்தேன். ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையிலும் எனக்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை. எனக்கு சகோதரி, சகோதரர்கள் இல்லை. இதனால் வரன் தேடி அலைய முடியவில்லை. எனவே கர்நாடக அரசு நான் திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். சாதி தடை இல்லை. எந்த சாதியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதற்கு என்ன பதிலளிப்பது என குழப்பத்தில் உள்ளனர்.