திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் முகமது தௌபிக்ராஜா (23) இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலர் தௌபிக்கை தாக்கி அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த முகமது தெளபிக் ராஜாவை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தத் தகவலை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று முன் தினம் இரவு திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பின்னர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து முகமது தெளபிக் ராஜா அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் முல்லை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (எ) பன்னீர் செல்வம்(23), அம்மா குளம் கலைவாணர் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆசைமுத்து (24), மலையடிவாரம் காந்திஜி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தோஷ் குமார் ( 20 ), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (20), உக்கடை மலையடிவாரம் அரியமங்கலத்தை சேர்ந்த ராமு மகன் ரெங்கா (எ) ரெங்கநாதன்(19), அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவை சேர்ந்த செல்வத்தின் 17 வயது மகன் ஆகிய 7 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்ததோடு அவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 5 பேரை திருச்சி மத்திய சிறையிலும் ஒருவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.