கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புத்தம்பூர் பகுதியில் கரூர் ஜவுளி பூங்கா செயல்பட்டு வருகிறது நூற்றுக்கணக்கான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் இப்பகுதியில் அட்லஸ் எக்ஸ்போர்ட் என்டர்பிரைசஸ் என்ற தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில தொழிலாளி அசோக் தாஸ் மகன்ந் (37), கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஹெல்பர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் கடந்த மாதம் மூன்றாம் தேதி கரூர் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்த அவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், அவரது மனைவி அனிதா மகன்ந் (34), மகள் முஸ்கன் சூர்யா (29) ஆகிய இருவரும் அதே நிறுவனத்தில் பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற அவரது மனைவி அனிதா மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.