தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவிற்கு புதியதாக ரூ.12,00,000/- மதிப்புள்ள தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச்செல்லும் வகையிலான Portable X-Ray Baggage Scanning Machine தமிழக அரசால் வழங்கப்பட்டது.
மேற்படி இயந்திரத்தை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்து மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவுக்கு (BDDS) ஒப்படைத்தார்.
இந்த ஊடுகதிர் நுண்ணாய்வு இயந்திரத்தின் மூலம் தடைசெய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டுவர அனுமதியில்லாத
பொருட்களை பொதுமக்கள் மறைத்து கொண்டு வருவதை கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. மேலும் மேற்கண்ட இயந்திரம் தேவைப்படும் இடத்திற்கு எடுத்து செல்லக்கூடிய வகையில் உள்ளதால், மிக முக்கிய பிரமுகர்களின் வருகை, பொதுக்கூட்டங்கள், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய கோவில் திருவிழா காலங்களில் தேவைபடும் இடங்களுக்கு எடுத்து சென்று பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.