திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற பெயரில் பேஸ்புக்கில் உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தநிலையில், முதல்நிலை காவலரான பெருமாள், முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை சந்தித்த புகைப்படத்தையும் வைத்து அதோடு காமெடி நடிகர் போண்டாமணியின் புகைப்படத்தையும் இணைத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் முதல் நிலைக் காவலர் நெல்லை பெருமாள் பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்தார். இதனிடைய மாலை ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, காவல்துறையின் அமைச்சரான முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையில் முதல் நிலை காவலர் பதிவிட்டுள்ளார்.
அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதுமானது அல்ல. இவ்வாறு மாலை ராஜா கூறினார். செந்தில் பாலாஜி கைது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரத்தை விமர்சித்த காவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.