பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை வெளியிடுபவர் சவுக்கு சங்கர். மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த வழக்கில் சுமார் 4 மாதங்கள் வரை சிறையில் இருந்தார்.
மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் அடுத்த முதலமைச்சர், திமுகவை அபகரிக்க திட்டமிட்டுள்ளார் என ட்வீட் செய்திருந்தார்.
இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மாதம் சவுக்கு சங்கருக்கு எதிராக 4 பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்த உண்மைக்கு புறம்பான தகவல்களை சவுக்கு சங்கர் பேசி வருவதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக தனது மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.