தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில் கட்டுமானப்பணிகள் நடப்பதால், கட்டுமானபொருட்களை எளிதில் உள்ளே எடுத்து செல்ல வசதியாக அலுவலக கட்டிடத்தின் பின்புறத்தை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் சாமிநாதன் சமீபத்தில் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் 4 பேர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி, மே 1ம் தேதி மற்றும் பல தேதிகளில் பித்தளை குத்துவிளக்குகள், பூஜை செட், கேரளா குத்துவிளக்குகள், பூஜை மணிகள் மற்றும் செம்பு பாத்திரங்கள், பழைய பித்தளை பொருட்கள் என்று சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளதை சாமிநாதன் தனது செல்போனில் இணைத்துள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து திருட்டுபோன ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கும்பகோணம் கிழக்கு போலீசில் சாமிநாதன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான சாமிநாதனின் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப்பார்த்த மணஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தன் (59), இன்னம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஷ்குமார் (43) ஆகியோரையும், திருட்டு பொருட்களை வாங்கிய வியாபாரி கும்பகோணம் ஜெ.பி.கீழவீதியை சேர்ந்த செம்புலிங்கம் மகன் முருகன் (60) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடிவருகின்றனர்.