தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் மன்றக் கூடத்தில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சி சிவக் குமார், கிராம ஊராட்சி சுதா உள்பட பங்கேற்றனர். இதில் பேசிய திமுக ஒன்றியக் கவுன்சிலர் ஹாஜா மைதீன் பேசும் போது, திருமண்டங்குடி ஊராட்சி, மெயின் சாலையில் பொது மக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மார்க்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார். திமுக ஒன்றியக் கவுன்சிலர் விஜயன் பேசும் போது, மாஞ்சேரி மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப் படுத்த வேண்டும். கூனஞ்சேரி ஓட்டை பாசன வாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியுள்ளதை அகற்ற வேண்டும். திருவிஜயமங்கை பழுதடைந்த சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை புதிதாகப் போட வேண்டும். திருவைக்காவூர் தேரோடும் வடக்கு வீதி சாலையை புதிதாகப் போட வேண்டும் என்றார். அ.ம.மு.க ஒன்றியக் கவுன்சிலர் சரவண பாபு பேசும் போது மேல கபிஸ்தலம் ஊராட்சி பாலக் கரையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நீர் ஆதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்றார். இதேப் போன்று அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்கள் முருகன், கோபிநாதன் பேசினர். இதில் அ.மு.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அன்பழகன், திமுக ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ் செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி மேற்க் கொள்ளப் பட்டது.