சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை.
நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை தலைவர் மைக்கேல் ரேயான் கூறும்போது,”கொரோனா இறப்பு குறித்து சீனாவின் வரையறை மிகவும் குறுகலானது” என்றார்.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5 ஆயிரம் பேர் பலியானதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி லிமிடெட் ஆய்வு நிறுவனம் கூறியதாவது:- சீனாவில் கொரோனாவின் ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மார்ச் மாதத்தில் 42 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாக நேரிடும். அப்போது உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும். சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 வைரசால் அடுத்தடுத்து 3 அலைகள் வரை ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் கூறும் போது, தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து உண்மையான தகவல்களை சீன அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.