அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் ஆபரேஷன் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் அந்த ஆஸ்பத்திரியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் மாலை 3.30 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே இங்கு வந்தேன். உங்கள் வாத, பிரதிவாதங்களை கோர்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என இருதரப்பு வழக்கறிஞர்களிடம் கூறிவிட்டு ஜூன் 28ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து நீதிபதி புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லியிடம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு திமுக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஜாமீன் கேட்டு வாதம் செய்தார்.
திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பபடவில்லை. அமலாக்கத்துறை எந்த விதிகளையும் பின்பற்றாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதம். மனைவி, உறவினர்களிடம் கைது பற்றி தகவல் தெரிவிக்கவில்லை. மனைவி, உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனவே ரிமாண்டை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டி உள்ளது. இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மக்களவை தேர்தலுக்காகவே அவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் கூறும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவர் ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டார். இந்த நிலையில் ரிமாண்டை நிராகரிக்க கோர முடியாது. அவர் கைது செய்யப்பட்டது சட்டப்படிதான். கைது செய்யப்படுவோம் என தெரிந்து மெமோவை பெற மறுத்தார். மனைவிக்கும், தம்பிக்கும் தகவல் தெரிவிக்க முயன்றோம். அவர்கள் போனை எடுக்கவில்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். செந்தில் பாலாஜியை வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றக்கூடாது. செந்தில் பாலாஜியை15 நாள் எங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்(இதற்கான மனுவும் தாக்கல் செய்தனர்)நேற்று வரை நன்றாக இருந்தார். சென்னை மருத்துவமனை அறிக்கை எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டி உள்ளது.
இவ்வாறு வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீதும், தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது, 15 நாள் கஸ்டடி தொடர்பான உத்தரவை நாளைக்கு( வியாழன்) பிறப்பிப்பதாகவும் கூறினார்.