அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அதில், “தனது கணவர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்த போது சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார்” என்று மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் கொண்ட அமர்வு மதியம் 2.15 மணிக்கு மனு மீது விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார். அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளதால் மீண்டும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு பட்டியலிடப்படும். அந்த நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த வழக்கை நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.