கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்புப் படை உதவியுடன் நடைபெற்றது. 10 இடங்களில் நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமாக அறிக்கை வௌியிட்டுள்ளது. மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்தறை அமைச்சர் செந்தில்பாலாஜி (47). இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 இன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் 3 முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.