அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசி உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு, தொண்டர்களிடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதா மீது மதிப்பு வைத்துள்ளார்கள். அண்ணாமலை திட்டமிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார். அண்ணாமலையின் பேச்சினை வன்மையாக கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1998 ல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வர அதிமுக தான் காரணம். 20 ஆண்டுகளுக்கு பின் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற அதிமுக தான் காரணம்” என்று கூறினார்.