அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
அந்த வகையில் மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலும் 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இதற்காக நாடு முழுவதும் 45 இடங்களில் ‘ரோஜ்கார் மேளா’ நடக்கிறது. இதில் மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.அதோடு, அரசு பணியில் எப்படி செயலாற்ற வேண்டும் என்று அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.