தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகை செல்வதற்காக திருத்துறைப்பூண்டி வந்துள்ளது. அங்கிருந்து நாகை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து 5 நிமிடத்திற்கு முன்பாக புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று வேண்டுமென்றே, பயணிகளை ஏற்றிக்கொண்டு உரிய இடைவெளி கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் பேருந்தை பின் தொடர்ந்து அரசு பேருந்து சென்றதோடு, தனியார் பேருந்தை முந்த முயற்சித்தும் அதற்கும் வழி கொடுக்க வில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், ஓடாச்சேரி அருகே தனியார் பேருந்தை முந்தி சென்று சாலை நடுவே பேருந்து நிறுத்தினார். தொடர்ந்து பேருந்தை விட்டு இறங்கி வந்த அவர், தனியார் பேருந்து ஓட்டுனரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் தனியார் பேருந்து ஓட்டுனரின் சட்டையைப் பிடித்து தகராறு ஈடுபட்டதால், அது கைகலப்பாக மாறிய நிலையில் அது தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.மேலும் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், அரசு பேருந்து முன்னும் தனியார் பேருந்தை பின்னுமாக இயக்கி சென்றனர். நாகை அருகே அரசு பேருந்தை சாலையின் நடுவே நிறுத்தி ஓட்டுனர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.