அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.
உறுதி மொழி நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை
தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன். தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் தேவேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் செந்தில்குமார், பாதுகாப்பு அலுவலர் ஜெ.செல்வராசு மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.