திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெண்ணிலா. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவளர்ச்சோலை பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்த சென்றார்.
அங்கு அவர் சோதனையை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, 10-க்கும் மேற்பட்டோர் உதவி ஆய்வாளர் வெண்ணிலாவின் வாகனத்தை மறித்து எப்படி சோதனை நடத்தலாம் என்று கேட்டு, அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களிடம் இருந்து உதவி ஆய்வாளரை மீட்டனர். இதனை தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த டேவிட், வல்லரசு மற்றும் செல்வராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.