தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கூடம் திறக்கப்பட்டு, 2023- 24 புதிய கல்வியாண்டு தொடங்க இருப்பதை முன்னிட்டு, நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழமை வாய்ந்த இத் திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் ஞானத்தின் பிறப்பிடமாக இருப்பதாலும், பிரகாரத்தில் கல்விக் கடவுளான அருள்தரும் ஞான சரஸ்வதி தனி சன்னதி கொண்டிருப்பதாலும், கல்வி பயிலும் மாணவ, மாணவியர் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து, தல விருட்சமான புரச மரத்தை சுற்றி வந்து வணங்கி, புதிய கல்வி ஆண்டை துவங்கும் போது அவர்களது கல்விப் பயணம் வெற்றிகரமாக இருக்கும். இவ்வூர் நோபல் பரிசுப் பெற்ற சர் சி. வி. ராமன் போன்ற அறிஞர்கள் பிறந்த ஊர்.
மாணவ, மாணவியரின் கல்வித்தரம் மேம்படவும் அறிவார்ந்த, நுட்பமான விஷயங்களில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறவும், கடவுளின் ஆசி, ஆசிரியர்களின் வாழ்த்து மற்றும் பெற்றோரின் வாழ்த்துக்களுமே காரணம் ஆகின்றன.
மேலும் இவையே ஞானத்தின் துவக்கம் என்பதாலும், இத்திருக் கோயிலில் புதிய கல்வி ஆண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைப் பெற்றது. தேவார திருமுறைகள், சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி மற்றும் சரஸ்வதி தோத்திரங்கள் பாடப்பட்டது. ஓம் நமசிவாய, சிவாய நம என்கின்ற பஞ்சாட்சரங்களை சொல்லிக்கொண்டு மாணவ மாணவியர் தல விருட்சமான புரசமரத்தை பக்தியுடன் வலம் வந்து வழிபாடு செய்தனர். நிறைவாக மாணவ, மாணவியருக்கு நோட்டு மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. வழிபாட்டில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கினார். சுவாமி,அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் சிவத்திரு. சிவ கண்ணன் செய்திருந்தார். வழிபாட்டில் திருக்கூட்டத்தைச் சார்ந்த பாஸ்கர், ஐய்யப்பன் உட்பட உள்ளூர் பக்தர்கள், பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.