தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அமைச்சர் பதவியேற்றபின் முதன் முதலாக நாளை(சனிக்கிழமை) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இளைஞர் அணி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் இருந்து கோவை வருகிறார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு கோவையில் தங்குகிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பங்கேற்கிறார். கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மாலையில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கோவைக்கு வருகை தருவதால், வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்பு அளிக்க மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார். இது கோவை மாவட்ட தி.மு.க.வினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அனைத்து அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக பங்கேற்கும்படியும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.