திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த 11 மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் ஹான்ஸ் – 105 கிலோ, விமல்-83 கிலோ மற்றும் கூல்லிப் – 30 கிலோ என சுமார் ரூ.1,40,000/- மதிப்புள்ள, 218 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தும்,
குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய TN 45 BJ 1117- Auto என்ற மூன்று சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி கடத்தலில் ஈடுபட்ட சாதிக்பாட்ஷா , அப்துல்காதர் , முகமது ஷெரீப் ஆகியோர்களை கைது செய்து எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் மேற்படி குட்கா பொருட்களை தில்லைநகர் காவல்நிலைய எல்லையில் காரில் பதுக்கி வைத்திருந்ததை எடுத்து வந்ததாக தெரிவித்தன் பேரில் இனாம்தார் தோப்பு பகுதியில் அதிரடியாக வாகன சோதனை செய்தபோது சந்தேகபடும்படியாக காரின் அருகில் நின்றுகொண்டிருந்த ஜெயராமன் , ஜாகுபார் சாதிக் ஆகியோரை விசாரணை செய்தும் அவர்களது TN 95 E 7007- Honda Amaze மற்றும் TN 45 BP 9316- Maruthi Suzuki Cias என்ற இரண்டு கார்களையும் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஹான்ஸ்-195 கிலோ, விமல்-2 1/2 கிலோ, RMD- 2 கிலோ, கூல்லிப் -13 கிலோ என மொத்தம் சுமார் ரூ.1,60,000/- மதிப்புள்ள, 212 1/2 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், அவர்களிடமிருந்து மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 45 C 5618- Access என்ற ஒரு இருசக்கர வாகனமும், பணம் ரூ.22,000/- மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி குட்காவை கடத்திய நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.