தஞ்சாவூரில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து தந்த பரிந்துரையில் கூறப் பட்டுள்ளதாவது…. பட்டுக்குடி,கூடலூர், புத்தூர் கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பாசன நஞ்சை நிலங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில், தூரியாறு வழியாக வெள்ளநீர் வந்து விவசாய பயிர்கள் அழுகி நாசமடைகிறது. எனவே தூரியாற்றிலிருந்து, மண்ணியாற்றுக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பட்டுக்குடி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் இருக்கும் தூரியாற்றின் மீதுள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டப் பட வேண்டும். குடிகாடு கிராமத்திலிருந்து, அம்மாப் பள்ளி தைக்கால் செல்லும் பாதையில் இருக்கும் வடிகால் வாய்க்காலுக்கு மண்ணியாற்றங் கரை வரை தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும்.
குடிகாடு,பட்டுக்குடி,கூடலூர்,புத்தூர் ஆகிய கிராமங்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காலங்களில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும்
கூடலூர் கிராமத்தில் ஆதிதிராவிட சமூக மக்கள் 150 பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்களில் 75 நபர்களுக்கு சொந்தமாக வீடுகள் கிடையாது. இவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
கூடலூர் கிராமத்திலிருந்து, பெருமாள்கோவில் ஊராட்சியை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
புதுக்குடிசை கிராமத்தில், பொதுப்பணித்துறை வாய்க்காலில் உள்ள தடுப்பணை பழுதடைந்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்று நீர் கிராமத்தில் புகுந்து மக்களுக்கு சிரமம் ஏற்படுகின்றது. சம்பந்தப்பட்ட தடுப்பணையை பழுது நீக்கம் செய்து தர வேண்டும். எடத்தெரு கிராமத்தில் 137 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காலங்களில் இந்த மக்கள் தங்குவதற்கு ஏதுவாக இங்கு ஒரு பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். கொள்ளிடம் உள்ளிட்ட பாபநாசத்தை சுற்றியுள்ள ஆறுகளில் திடீரென ஏற்படும் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொள்வோரை மீட்க இயந்திரப் படகுகளின் தேவை அவசியமாகிறது. பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு ஒரு இயந்திரப் படகு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் கல்லணை-அணைக்கரை இடையே பொதுப்பணித்துறை சாலை அமைந்துள்ளது.
போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலையில், மிகவும் சேதமடைந்த நிலையில் இருக்கும் இந்த சாலை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மீட்புப் படையினர் தங்களின் பணிகளை மிகுந்த சிரமத்துடன் செய்து வருகின்றனர். மேலும் கொள்ளிடக் கரையோர கிராம மக்களுக்கு போக்குவரத்து பாதையாகவும், இது இருப்பதால், உடனடியாக இந்த சாலையை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருந்து கரையோர மக்களையும், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்க பட்டுக்குடியிலிருந்து கூடலூர் வரை வெளிவட்ட சாலையுடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மேட்டுத் தெரு – அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல் மற்றும் மண்ணியாற்றின் மீது பாலம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ஆழ்குழாய் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் சத்தியமங்கலம் வாழ்க்கை – அரியலூர் மாவட்டம் தூத்தூர் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில், பட்டுக்குடி மற்றும் கூடலூர் கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில், வெள்ள நீர் புகுந்து, வீடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் அடிமட்டத்தை உயரமாக அமைத்து வீடுகள் கட்டித் தர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கபட்டுள்ளது.