தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தஞ்சையை முடித்துவிட்டு திருச்சிமாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது ஆலங்குடி என்ற கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமான பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பெண்கள் வேலை செய்வதை பார்த்த முதல்வர் வேனில் இருந்து இறங்கி அங்கு சென்று பெண்களிடம் பேசினார். இங்கு என்ன பணி நடக்கிறது. எத்தனை நாளாக இந்த வேலை நடக்கிறது. இதற்கான சம்பளம் சரியாக கொடுக்கப்படுகிறதா என கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் பொதுமக்கள் திரளாக நின்று முதல்வரை வரவேற்று மகிழ்ந்தனர். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலியில் வந்திருந்தார். அவரை பார்த்ததும் முதல்வர் அவரிடம் சென்று விசாரித்து அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார்.
திருமணக்கோலத்தில் ஒரு திருமண ஜோடியும் முதல்வரை வரவேற்க காத்திருந்தது. அவர்களை பார்த்த முதல்வர் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விமான நிலையம் சென்று சென்னை புறப்பட்டார்.
முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள், நீர்வளத் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, திருச்சி மாவட்டகலெக்டர் எம். பிரதீப் குமார், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.