Skip to content
Home » குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு…. டெண்டர் அறிவிப்பு வெளியீடு

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு…. டெண்டர் அறிவிப்பு வெளியீடு

பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும். நிலையான கால நிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் புவியியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது. இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது.  குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். அதே போன்று கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு சுமார் 120 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும்.

இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவதை விட சற்று அதிகம். ஆனால் இதனால் ஏற்படும் இழப்பை புவியீர்ப்பு சுற்று வேக அதிகரிப்பால் ஏற்படும் விசையை கொண்டு ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது.ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து முதலில் பிரியும் பாகம் வங்காள விரிகுடாவிலும், 2-வது பாகம் இந்திய பெருங்கடலிலும் விழும். இதனால் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. பின்னர் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இதைத்தொடர்ந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை தொடங்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக ரூ. 6 கோடியே 24 லட்சத்திற்கு டெண்டர்கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர் எடுக்க விரும்புவோர் வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்ததும் அதில் இருந்து ஒரு வாரத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *