சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் நிலவும் ‘பிபபர்ஜோய் புயல் நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், கோவாவில் இருந்து மேற்கு மற்றும் தென்மேற்கே 850 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து தென்மேற்கே 900 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுஇருந்தது.
இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும். இது இந்தியக் கடலோரப் பகுதியில் இருந்து விலகிச் சென்றுவிட்ட நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், தென் தமிழகப் பகுதிகளிலும் மழை பரவியுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 9) ஓரிரு இடங்களிலும், வரும் 10, 11, 12-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.