Skip to content
Home » உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று  முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும் குவித்தனர்.

இந்திய  வீரர் முகமது சிராஜ் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 14 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜடேஜா 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே(29 ரன்கள்) மற்றும் பரத் (5 ரன்கள்) களத்தில் உள்ளனர். இந்திய அணி 318 ரன்கள் பின்னிலையில்  உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு 3வது நாள் ஆட்டம் தொடங்குகிறது. இந்திய அணியில் எஞ்சியுள்ள 5 வீரர்களும் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிப்பார்கள் என்பது  தெரியவில்லை.  இந்திய அணி இனி நிலைத்து ஆடி ரன் சேர்க்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.  எனவே இந்தியா பாலோ ஆன் ஆடவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

தற்போதைய நிலையில் இந்திய அணி வெற்றிக்கான  வாய்ப்பை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அதே நேரத்தில் இனியாவது சுதாரித்துக்கொண்டு ஆடினால் டிரா செய்ய போராடலாம் என்ற நிலையில் தான் இந்தியா உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!