உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர் கவாஜா (0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான வார்னர் 43 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்துவந்த லபுஷேன் 26 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது.
டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் அடித்த 31 வது சதம். தொடர்ந்து ஹெட் மற்றும் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பரத்திடம் அவர் கேட்ச் ஆனார். அப்போது ஆஸ்திரேலிய அணி 361க்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
ஸ்மித்துக்கு ஜோடியாக கிரீன் களமிறங்கினார். அவர் 6 ரன்னில் அவுட் ஆனார். ஷமி பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 94.2 ஓவரில் 376 ரன்கள் குவித்திருந்தது. கிரீனுக்கு பதில் அலெக்ஸ் ஆட வந்தார். தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.