தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மனிஷ் நரனவாரே, நியமிக்கப்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது மனிஷ் நரனவாரே ஈரோடு கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் மீது புகார்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தலைமைச் செயலாளருக்கு 2 பக்க புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவர் தெரிவித்துள்ள புகாரில், நான் டாக்டர் மனிஷ் நரனவாரே, தற்போதைய ஈரோடு கூடுதல் கலெக்டர், சென்னை மாநகராட்சியில் துணை சுகாதார ஆணையராக இருந்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவங்களப் பகிர்ந்து கொள்கிறேன். 14/06/2021 முதல் 13/06/2022 வரை நான் அந்தப் பதவியில் இருந்தபோது அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி என்னை சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தினார்.
நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டே என்னை வெகுவாக அடக்குமுறைக்கு ஆளாக்கினார். பணி நிமித்தமாக என்னை துன்புறுத்தினார். கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினார். ஒரு கையெழுத்துக்காக இரவு வெகு நேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரைப் பார்க்கச் சென்றால், தம்பி இப்போ லேட் ஆயிடுச்சு நாளை பார்த்துக்கலாம் என்பார். இதுவே தினமும் நடந்தது.
ஒருமுறை இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நீ புத்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜய்ன் கோயிலுக்குச் செல்கிறாய் என்று கேட்டு காயப்படுத்தினார். எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார். அதேபோல் திடக்கழிவு மேலாண்மை சீனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடனும் எனக்கு மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கினார். நான் இங்கே பட்டியலிட்டது ஒரு சில சம்பவங்கள் தான்.
அவருடைய தொந்தரவு தாங்காமல் நான் மன அழுத்தத்திற்குச் சென்றேன். அது குறித்து நான் அவரிடமே சொன்னேன். ஆனாலும் அவர் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் என் தந்தை ஊரில் இருந்து கிளம்பிவந்து என்னை தைரியப்படுத்தினார். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது.
சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். என் துயர்மிகு காலத்தில் எனது மருத்துவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஐஏஎஸ்-சும் உற்ற துணையாக இருந்து என்னைத் தேற்றினர். இவ்வாறு மனிஷ் தனது புகாரில் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் சென்னையில் பணியில் இருந்தபோது மனிஷ் எந்த புகாரும் கூறவில்லை. அப்போதும் இதே அரசுதான் இருந்தது. சென்னை மாநகராட்சி பணியில் இருந்து அவர் விடுபட்டு சரியாக 1 வருடம் ஆன நிலையில் இப்போது ஏன் இந்த புகாரை கூறுகிறார்.
ககன்தீப் சிங் பேடி தமிழகத்தில் துணை கலெக்டர், கலெக்டர், துறை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். நீண்ட அனுபவம் பெற்றவர். அவர் மீது யாரும் இப்படி ஒரு புகார் கூறியதில்லை. ஆனால் ஒரு ஜூனியா் ஐஏஎஸ் அதிகாரி 1 வருடம் கழித்து இந்த புகாரை கூற காரணம் என்ன என்ற கேள்வி இப்போது உயர் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ககன்தீப் சிங் பேடி மீது சென்னை மக்களுக்கு சிந்த சேவையாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்துள்ளார். குறிப்பாக கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணியை அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் சம்பவம் நடந்து சரியாக ஒருவருடம் கழித்து இப்போது புகார் செய்வது ஏன்? சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்திலும் இதே அரசு தான், இதே தலைமை செயலாளர் தான் இருந்துள்ளனர். அப்போது ஏன் புகார் செய்யவில்லை.? ககன்தீப் சிங் பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை யாரும் தூண்டி விட்டார்களா என்று தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.