அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4 நாட்களில் பருவமழை தொடங்கினாலும், அது வழக்கமான காலத்தில் தொடங்கியதாகவே கருதப்படும். எனினும், ஜூன் 5-ம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால், தாமதமாக தொடங்கியதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு இதுவரை தென்மேற்குப் பருவமழை தொடங்கவில்லை. இந்த நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.