இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய பேட்டிங்கில் அதிக அளவில் இடதுகை பேட்ஸ்மென்கள் இருக்கும்போது இடதுகை பேட்ஸ்மென்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசும் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணி தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது. இந்த நிலையில், அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்த போட்டியில் முதல் இன்னிங்சுக்கு தகுந்தாற்போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வுசெய்து இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜடேஜாவை விட அஸ்வின் சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்திய அணி அவரை அணியில் எடுக்காமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.