அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ் அணியை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் தனது அணியினருடன் சென்று சந்தித்தார். சசிகலாவையும் சந்திப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று தஞ்சையில் ஓபிஎஸ் அணியின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணம் நடந்தது. இதில்டிடிவி தினகரன் பங்கேற்றார். சசிகலாவும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. இதனால் ஓபிஎஸ் அப்செட் ஆகிய நிலையில் காணப்பட்டார். இந்த திருமண விழாவுக்கு சசிகலா வந்தால், நாங்கள் மூவரும் ஓரணியில் திரண்டு விட்டோம். தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் என மத்திய அரசிடம் மீண்டும் நெருக்கத்தை காட்டலாம் என ஓபிஎஸ் கணக்கு போட்டார். ஆனால் சசிகலா இதற்கு இடம் கொடுக்கவில்லை.
இதற்கு காரணம், ஓபிஎஸ் தற்போது டிடிவி தினகரனுடன் நெருக்கமாக இருப்பது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை அதே நேரத்தில் ஓபிஎஸ்சுடன் சேர்ந்தால் தனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது சசிகலாவின் கணிப்பு. அதே நேரம் அதிமுகவை கைப்பற்றியுள்ள எடப்பாடியுடன் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் என்பது தான் சசிகலாவின் திட்டமாகவும் உள்ளதாம்.எனவே ஓபிஎஸ் அணியுடன் சேராமல் அவர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.