கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் விடுவதாக கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் கருப்பண்ணனை தேடி உறவினர்கள் சென்று பார்த்த போது முதியவர் கருப்பண்ணன் எரிந்து கரிக்கட்டையான நிலையில் சடலமாக கடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்சனை சம்பந்தமாக கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் தான் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், அவரை கைது செய்யும் வரை பிரேதத்தை எடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.