ஒடிசா ரெயில் விபத்தில் சுமார் 288 பேர் இறந்து உள்ளனர். அடையாளம் காணப்படாத சடலங்கள் ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள அறையிலும் பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை மீட்பு படையினர் ஆய்வுக்காக எடுக்க சென்றனர். உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையினர் காலை திடீரென யாரோ பிடித்துள்ளனர்.
இதனால் மீட்புபடை வீரர் அதிர்ச்சியில் அலறிவிட்டார். ஏதோ, காத்து கருப்பு பிடித்துவிட்டது என கருதினார். பின்னர் தான் தெரிந்தது அவரது காலை பிடித்தவர் ரயில் விபத்தில் காயங்களுடன் உயிர்பிழைத்த நபர் என்பது. விபத்தில் கால்களை இழந்து காயங்களுடன் மயங்கி கிடந்தவரை செத்தவர்கள் பட்டியலில் சேர்த்து பிணவறையில் அடுக்கி விட்டனர். ஆனாலும் அவர் தப்பி. உயிர்பிழைத்தார். அவரது பெயர் ராபின். வயது. 35. என விசாரணையில் தெரியவந்தது.
மெல்ல விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டார் பின்னர் அவரை, மீட்பு படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்தில் கால்களை இழந்த ராபின் உயிர்பிழைத்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.