நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் முகேஷ் (26), மகள் பாரதி. இதில் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. டிப்ளமோ முடித்த முகேஷ் நாகையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் போட்டோகிராபராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் முகேஷ் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் 4ம் தேதி அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பூண்டி காரைநகர் அருகே முகேஷ் வந்த பைக் விபத்தில் சிக்கியது; இதில் படுகாயமடைந்த முகேசை உடன் அக்கம்பக்கத்தினர் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முகேஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் முகேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்த விபரத்தை முகேஷின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்தவுடன் முகேஷின் பெற்றோர் கதறிய கதறல் மருத்துவமனையில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. தொடர்ந்து உடலுறுப்பு தானம் குறித்து முகேசின் பெற்றோரிடம் விளக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முகேசின் பெற்றோர் அந்த சோகமான நேரத்திலும் தனது மகனின் உடல் உறுப்புகளால் பிறருக்கு நன்மை ஏற்படும் என்பதை உணர்ந்து உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து முகேஷின் கண்கள், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. பின்னர் அந்த உடல் உறுப்புகள் மதுரை, பெரம்பலூர் மற்றும் தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் துரிதமாக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் தங்களின் ஒரே மகனை இழந்த துயரமாக நேரத்திலும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்த முகேஷின் பெற்றோரை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.