ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்து இருப்பதாக ரயில்வே அமைச்சர் அறிவித்தார். இதற்கிடையே 275 பேரை பலி கொண்ட இந்த ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சைலேஷ் குமார் பதக் தனது விசாரணையை நேற்று தொடங்கினார். இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.
கோரமண்டல் ரெயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் விபத்து நடந்த விதம், விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிபிஐ விசாரணை முடிந்த பிறகே, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. ரெயில் விபத்தை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.