மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்து முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அடுத்த கட்டமாக வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.