புதுக்கோட்டை மாவட்டம் கோமாவரத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களின் மகள்கள் பெரிய நாயகி (8). 3ம் வகுப்பு படித்து வந்தார். விருத்திகா (6). 1ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தனது மனைவியின் சொந்த ஊரான தஞ்சை அருகே வல்லம் புதூருக்கு வந்து புண்ணியமூர்த்தி குடும்பத்துடன் கடந்த ஒரு வருடமாக தங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தனது மகள்கள் பெரிய நாயகி, விருத்திகாவுடன் அப்பகுதியில் உள்ள புதுக்குளத்திற்கு குளிப்பதற்காக
புண்ணியமூர்த்தி சென்றுள்ளார். மகள்களை கரையில் உட்கார வைத்து விட்டு இயற்கை உபாதைக்காக புண்ணியமூர்த்தி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் புண்ணியமூர்த்தி திரும்பி வந்து பார்த்தபோது கரையில் உட்கார்ந்திருந்த சிறுமிகள் பெரியநாயகி, விருத்திகாவை காணாமல் அதிர்ச்சியடைந்து தேடியுள்ளார்.
அப்போது சிறுமிகள் இருவரும் குளத்தில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி சிறுமிகளின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமிகள் இருவரும் எப்படி குளத்தில் இறங்கினர் என்பது உட்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அக்கா, தங்கை இருவரும் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.